பிற மாநில பக்தர்கள் வராததால் 2-ஆவது வாரமாக வெறிச்சோடியது திருநள்ளாறு

புதுவையில்  வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வராததால் திருநள்ளாறு கோயில் பக்தர்களின்றி சனிக்கிழமை வெறிச்சோடியது.
பிற மாநில பக்தர்கள் வராததால் 2-ஆவது வாரமாக வெறிச்சோடியது திருநள்ளாறு

காரைக்கால் : புதுவையில்  வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வராததால் திருநள்ளாறு கோயில் பக்தர்களின்றி சனிக்கிழமை வெறிச்சோடியது.

பொது முடக்கத்தால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் அவற்றை திறந்து பக்தர்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டது.

காரைக்கால் மாவட்டத்தில், திரளான பக்தர்களை ஈர்க்கும் வகையில் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் உள்ளது. கோயில்கள் திறப்பு செய்து முதல் வாரமான 13-ஆம் தேதி சனிக்கிழமை 250-க்கும் குறைவான பக்தர்களே தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலுக்கு தமிழகம், கர்நாடகத்திலிருந்து வழக்கமாக சனிக்கிழமையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய வருவார்கள்.

பொது முடக்கம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் காரைக்காலுக்குள் நுழைவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இக்கோயிலுக்கு பக்தர்கள் வரத்து கோயில் வரலாற்றில் காணாத வகையில் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதித்து 2-ஆவது வாரமான 20-ஆம் தேதி சனிக்கிழமை இக்கோயில் காலை 6 மணிக்கு நடை திறந்து பகல் 12.30 மணிக்கு மூடியபோது, 100-க்கும் குறைவான பக்தர்களே தரிசனம் செய்தனர்.

கரோனா பரவல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில், தமிழகப் பகுதியையொட்டியுள்ள பிரதான 7 எல்லைகள் வருவாய்த்துறை, காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. காரைக்கால் பகுதியில் தமிழகப் பகுதிக்குச் செல்லக்கூடிய குறுக்குப் பாதைகளாக 30 உள்ளன. இவற்றையும் காவல்துறையினர் மூடி கண்காணிப்பு செய்கின்றனர். வெளி மாநிலத்தவர்கள் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவம், அரசுப் பணி தொடர்பான அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவதால், பிற மாநிலத்தவர்கள் காரைக்காலுக்குள் நுழைவதில் கடும் சிக்கல் நிலவுகிறது.

வெளி மாநிலத்து பக்தர்களால் மட்டுமே  சனிக்கிழமைகளில் நிரம்பி வழியும் திருநள்ளாறு கோயில் மற்றும் திருநள்ளாறு நகரப் பகுதி, பக்தர்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

கோயிலில் பக்தர்கள் வரும்போது கை கழுவ வசதி, சானிடேஷன் வசதி, வெப்பமானி மூலம் பரிசோதனை, பெயர், ஊர், செல்லிப்பேசி விவரம் சேகரிப்பு போன்ற பணிகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை என்பதால் உள்ளூர் மக்கள் வெகுவாக வரக்கூடும் என்பதை கருத்தில்கொண்டு, காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம் கோயிலுக்குச் சென்று கரோனா தடுப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

கோயிலில் வழக்கமான கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்றனர். ஆராதனைகள், பிரசாதம் தருதல் போன்றவை இல்லை. சனிக்கிழமையில் வரும் பக்தர்களால் பூஜை வியாபாரம், உணவகங்கள் உள்ளிட்ட வியாபாரம் முற்றிலும் முடங்கியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com