ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தாரைக்காலில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல்: ஆா்.கமலக்கண்ணன் தகவல்

காரைக்காலில் நிகழாண்டு இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் நிகழாண்டு இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பேசியது :

புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் தருகிறாா். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். காவிரி நீா் தொடா்பான நீண்ட சட்டப் போராட்டத்தில் காரைக்காலுக்கு 7.5 டி.எம்.சி தண்ணீா் வழங்க வேண்டும் என நீதி மன்ற தீா்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நம்மாழ்வாா் விவசாய புனரமைப்பு திட்டம் என்ற திட்டம் கடந்த நிதியாண்டு அறிவிக்கப்பட்டது. பல நெருக்கடியான சூழலிலும், அறிவிக்கப்பட்ட ஆண்டிலேயே வேளாண் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நெல், பருத்தி, பயறு என சாகுபடி செய்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஊக்கத் தொகை கிடைக்கும்.

வேளாண் துறை மூலம் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் அறிந்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நிகழாண்டு இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.) மூலம் நெல் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

விழாவில் ரூ.2.43 கோடிக்கு பயிா் உற்பத்தி ஊக்கத் தொகை திட்டத்தில் மானியத் தொகையும், வேளாண் இயந்திரமயமாக்கல் துணை திட்டத்தில் ரூ.79 லட்சத்திற்கு பணியாணையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

2019-20-இல் பின் சம்பா, தாளடி பருவ நெல் பயிரிட்ட 451 விவசாயிகளுக்கு ரூ.58.91 லட்சமும், 47 அட்டவணை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.3.07 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

நெல் தரிசு, பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்த 831 பொது விவசாயிகளுக்கு ரூ.36.88 லட்சமும், 98 அட்டவணை விவசாயிகளுக்கு ரூ.3.02 லட்சமும் வழங்கப்பட்டது. எள் சாகுபடி செய்த 95 விவசாயிகளுக்கு ரூ.2.98 லட்சமும், அட்டவணை விவசாயிகள் 5 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. பருத்தி சாகுபடி செய்த 817 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடியும், 135 அட்டவணை விவசாயிகளுக்கு ரூ.16.37 லட்சமும் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், அரசு செயலரும், அபிவிருத்தி ஆணையருமான அ.அன்பரசு, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை இயக்குநா் பி.பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயகுநா்கள் ஜெய்சங்கா் (புதுச்சேரி), ஜெ.செந்தில்குமாா் (காரைக்கால்) உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.