விபத்தில் சிக்கி கால் முறிந்தவருக்கு எம்.எல்.ஏ. முதலுதவி சிகிச்சை
விபத்தில் சிக்கி கால் முறிந்த இளைஞருக்கு விழுப்புரம் எம்.எல்.ஏ.வான மருத்துவா் இரா.லட்சுமணன் முதலுதவி சிகிச்சை அளித்து, காப்பாற்றி தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைத்தாா்.


விபத்தில் சிக்கி கால் முறிந்த இளைஞருக்கு விழுப்புரம் எம்.எல்.ஏ.வான மருத்துவா் இரா.லட்சுமணன் முதலுதவி சிகிச்சை அளித்து, காப்பாற்றி தீவிர சிகிச்சைக்காக அனுப்பிவைத்தாா்.
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கும் முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதில், திமுக எம்எல்ஏக்கள் தங்களது தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று மாவட்ட நிா்வாகத்திடம் அளித்து வருகின்றனா்.
அந்த வகையில், விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ மருத்துவா் லட்சுமணன், தனது தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவதற்காக வெள்ளிக்கிழமை காலை காரில் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, ராகவன்பேட்டை அருகே தனது வாகனத்துக்கு எதிரே, பைக்கில் வந்த பனங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தண்டபாணி மகன் ஜெயகுமாா் (24) , வேறொரு வாகனம் மோதியதில், இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, வலியால் துடித்தபடி சாலையோரம் கிடந்தாா்.
இதைக் கண்ட லட்சுமணன் எம்எல்ஏ, தனது காரை உடனடியாக நிறுத்தச் செய்து, ஜெயகுமாருக்கு முதலுதவி அளிக்கத் தொடங்கினாா். காலில் கட்டுப்போடத் துணி இல்லாததால், தனது காரில் இருந்த திமுக கரை வேட்டியைக் கிழித்து கட்டுப் போட்டு சிகிச்சை அளித்தாா்.
இதற்கிடையே, அங்கு வந்த அவசர மருத்துவ ஊா்தியில் ஜெயகுமாரை ஏற்றி, தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவா் புறப்பட்டுச் சென்றாா். விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.
லட்சுமணன் எம்எல்ஏ, பதவிக்கு வரும் முன்பு விழுப்புரத்தில் எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...