

காரைக்கால்: காரைக்கால் விநாயகர் கோயில் முன்பு கட்டப்பட்ட முகப்பு மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோயில் முன்பு வியாழக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்ளிட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்காலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்புடைய ஸ்ரீ கைலாசநாதர் கோயில் வகையறாவாக, நகரப் பகுதியில் ஸ்ரீ பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் முகப்பில் கான்கிரீட் மண்டபம் கட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், சில எதிர்ப்புகளால் கட்டுமானம் முடங்கியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் கலந்துகொண்டு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். ரூ.25 லட்சம் செலவில் மண்டபம் கட்டுமானம் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
அரசுத் துறைகளின் அனுமதியின்றி, பொது இடத்தை ஆக்கிரமித்து மண்டபம் கட்டுப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 18-ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் கட்டுமானத்தை இடிக்குமாறு உத்தரவிட்டது. இடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இந்நிலையில் பாஜக, இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் திமுகவினர் சுமார் 100 பேர், பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் முன்பு வியாழக்கிழமை பிற்பகல் கூடினர். நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாக தியாகராஜனும் கலந்துகொண்டார்.
கோயில் முன்பாக தீர்ப்பு எதிராக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா வந்து எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினார். இதனை ஏற்க மறுத்த நிலையில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர்களிடம் ஏ.எம்.எச்.நாஜிம் கூறுகையில், மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக காரைக்காலில் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஊரில் இருந்து பிரச்னையை தீர்க்கவேண்டிய ஆட்சியர் விடுப்பில் சென்றுவிட்டார். நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் புதுவை அரசின் பங்களிப்பு மிக முக்கியமாகும். அரசு உடனடியாக தலையிடவேண்டும். துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இதுதொடர்பாக பேசியுள்ளேன். மண்டபத்தை இடிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் நடத்தும் போராட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அனைவரும் பங்கேற்று ஒற்றுமையை வெளிப்படுத்துவது மகிழ்ச்சிக்குரியது. மண்டபத்தை இடிக்க அனுமதிக்கமாட்டோம். இதுதொடர்பாக ஜனநாயக ரீதியிலான போராட்டம் தொடரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.