மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி காரைக்காலில் பல்வேறு அரசியல் கட்சியினர் பேரணி
By DIN | Published On : 23rd August 2022 01:40 PM | Last Updated : 23rd August 2022 01:40 PM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்காலில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் சார்பில், காரைக்காலில் மதவெறியை தூண்டுவதை கைவிடக்கோரியும், சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீதான தாக்குதலை கைவிடக்கோரியும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும் பேருந்து நிலைய பகுதியிலிருந்து அரசலாறு பாலம் வரையிலான பேரணி நடைபெற்றது.
காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சியினர், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திரளானோர் இப்பேரணியில் ஈடுபட்டனர்.
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.
பேரணி நிறைவில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சரும், புதுவை காங்கிரஸ் கட்சி அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான ஆர்.கமலக்கண்ணன் கூறியது :
ஒவ்வொரு மதத்திற்கும் வழிபாடு உள்ளிட்டவற்றில் அவர்களது உரிமை தொடர்பாக அரசியல் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. காரைக்காலில் அண்மையில் கிறிஸ்தவ அமைப்பினர், ஒரு பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வந்தபோது, அங்கு வந்த பாஜக, இந்து முன்னணி போன்ற அமைப்பினர் அவர்களை தடுத்து, தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை உரிய வழக்குப் பதிவு செய்யவும் இல்லை.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினருக்கு ஆதரவான போக்கை கையாளுகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் போகும்போது, மத ரீதியில் பிரச்னை எழுகிறது. பாஜக, இந்து அமைப்பினர் அவர்களது அரசியல் மேம்பாட்டுக்கு நேர் வழியை கையாளவேண்டும்.
இதையும் படிக்க: வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை
குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டால் மத ரீதியிலான பிரச்னை எழும். இதனை உணர்ந்து காரைக்கால் அமைதியாகவும், மதத்தினரிடையே ஒற்றுமையாக இருக்கவும் அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.