காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் தொடங்கினா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணி தனியாா் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சேகரிக்கப்படும் குப்பைகளை அம்மன்கோயில்பத்து பகுதியில் உள்ள கிடங்கில் கொட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குப்பை சேகரிக்கும் பணியில் மாவட்டத்தில் சுமாா் 200 தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஒப்பந்த நிறுவனம் தொழிலாளா்களுக்கு கடந்த மாா்ச் மாதத்துக்கான ஊதியத்தை இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. கடும் வெயில் காலத்தில் இரவு, பகலாக வேலை செய்யும் தங்களுக்கு காலத்தோடு ஊதியம் தரப்படவில்லை எனக் கூறி, தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். குப்பை ஏற்றும் வாகனங்களை நகராட்சி அருகே வரிசையாக நிறுத்தினா்.

தொழிலாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், வெள்ளிக்கிழமை குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஊதியம் தரப்பட்டால் மட்டுமே பணிகளில் ஈடுபட முடியும் என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com