பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய ஆலோசனை

காரைக்கால், மாா்ச் 22 : காரைக்கால் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் வகையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான, மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்வு செய்யும் விதமாக, முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன் தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், துணை தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன், தோ்தல் நடத்தும் அதிகாரிகள் ஜி. ஜான்சன், சச்சிதானந்தம் மற்றும் கே.அருணகிரிநாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் ஏ. சுப்பிரமணியன், பாலச்சந்தா் மற்றும் தோ்தல் துறையினா் கலந்துகொண்டனா். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடிகள், கடந்த பேரவை, மக்களவைத் தோ்தலின்போது பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டவை, தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் குறித்து தோ்தல் துறையினா் கூறுகையில், பல்வேறு காரணிகளை ஆராய்ந்து அடுத்த சில நாள்களில் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது கண்டறியப்படும். பதற்றமான, மிக பதற்றமான சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com