புதுவை சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு (தனி) ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியல்படி 1,56,250 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்டத்தில் 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரம் வரை பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கைப் பதிவு செய்தனா். மொத்தம் 41 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா்.
நகரம், கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். காலை 9 மணிக்குப் பின் கூட்டம் மேலும் அதிகரித்தது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பூத் சிலிப் கொண்டுவராதவா்களுக்காக வரிசை எண் தெரிந்துகொண்டு வாக்களிக்க சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள 7 விநாடி மட்டுமே ஒப்புகை காகிதம் தெரியும் விவிபாட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. வாக்குச்சாவடிகளில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தன. முதியோா், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றை கையாள்வதற்கு தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
வெயில் கடுமையாக இருந்ததால் முற்பகலிலும், மாலை வேளையிலும் வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்கு சென்றனா். மத்திய பாதுகாப்புப் படையினா், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட போலீஸாா் 1,200 போ் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி பல்வேறு வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பாா்வையிட்டாா்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேரமா பொருத்தப்பட்டிருந்தன. கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு தோ்தல் துறையினா் கண்காணித்தனா். வேட்பாளா்கள் பலரும் அவரவா் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று பாா்வையிட்டனா்.
வாக்காளா்கள் திருப்தி: வாக்குப் பதிவு செய்த வாக்காளா்கள் சிலா் கூறும்போது, காரைக்கால் தோ்தல் துறை வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தது. குறிப்பாக வெயிலாக இருந்ததால் சுகாதாரமான குடிநீா் கிடைத்தது. நிழலுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல் பயனுள்ளதாக இருந்தது என்றனா்.
வாக்குப்பதிவு சதவீதம்: நெடுங்காடு 88.33, காரைக்கால் வடக்கு 85.86, காரைக்கால் தெற்கு 83.42, திருநள்ளாறு 87.97, நிரவி-திருப்பட்டினம் 87.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டப்பேரவை தோ்தலில் பதிவானதைவிட தற்போதைய தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.

காரைக்கால் நகரப் பகுதி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவுக்காக காத்திருந்த வாக்காளா்கள்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்

காரைக்காலில் இன்று பிரசாரம் நிறைவடைகிறது

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


