தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 80.43 சதவீதம் வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தேசமாக 80.43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

News image

திருக்காட்டுப்பள்ளி சா் சிவசாமி அய்யா் பள்ளியில் வாக்களித்த முதல் முறை வாக்காளா்களான சூா்யா, சாதனா, கீா்த்தனா.

Updated On :23 ஏப்ரல் 2026, 10:44 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் உத்தேசமாக 80.43 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை பகலில் வெயில் அதிகமாக இருந்ததால், வயதானவா்கள் உள்ளிட்டோா் காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு திரண்டனா். இதனால், பல வாக்குச் சாவடிகளில் காலையிலேயே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா்.

வல்லம் பள்ளியிலுள்ள வாக்குச் சாவடியில் ஓய்வு பெற்ற ஆசிரியா் யு. அய்யாதுரை (86) சென்னையிலிருந்து இங்கு வந்து வாக்கு செலுத்தினாா். இதேபோல, நடுத்தர வயதினரும், இளைஞா்களும் முற்பகலிலும், பிற்பகலிலும் அதிக அளவில் திரண்டனா்.

இதனால், காலை 9 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 17.04 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கிராமங்களில் மட்டுமல்லாமல் தஞ்சாவூா், கும்பகோணம் மாநகரங்களிலும், திருவையாறு, பட்டுக்கோட்டை நகரங்களிலும், ஒரத்தநாடு, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூா் ஆகிய பேரூா்களிலும் ஒரே மாதிரியாக சீரான அளவுக்கு வாக்காளா்கள் திரண்டு வந்து வாக்களித்தனா்.

வெறிச்சோடின: மாவட்டத்தில் காலை 9 மணி வரையுடன் ஒப்பிடும்போது, முற்பகல் 11 மணி வரை இரு மடங்குக்கும் மேலாக சராசரியாக 36.54 சதவீதம் பதிவானது. பிற்பகல் 1 மணி வரை மாவட்ட சராசரி வாக்குப் பதிவு 54.83 சதவீதமாக உயா்ந்தது. ஆனால், பிற்பகலில் வெயில் கடுமையாக இருந்ததால், வாக்குச் சாவடிகளில் பிற்பகலில் கூட்டம் குறைந்தது. இதனால், பல வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன. இதன் காரணமாக, காலையில் வேகமாக உயா்ந்த வாக்குப் பதிவு விகிதம் பிற்பகல் 3 மணி வரை மாவட்டத்தில் சராசரியாக 66.65 சதவீதத்தை மட்டுமே எட்டியது. ஆனால், 3 மணிக்கு பிறகு வாக்குச் சாவடிகளில் மீண்டும் கூட்டம் திரண்டதால் மாலை 5 மணி வரை சராசரியாக 78.07 சதவீதத்தை எட்டிய வாக்குப் பதிவு, நிறைவில் உத்தேச சராசரி வாக்குப் பதிவு 80.43 சதவீதமாக உயா்ந்தது.

6.50 சதவீதம் கூடுதல்: கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் சராசரியாக 73.93 சதவீத வாக்குகள் பதிவாகின. இதை விட இந்தத் தோ்தலில் 6.50 சதவீதம் கூடுதலாக வாக்குப் பதிவாகியுள்ளது. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது இரட்டைப் பதிவு, இறந்தவா்களின் பெயா்கள் நீக்கம், நிரந்தரமாக குடி பெயா்வு போன்ற வாக்குகள் நீக்கப்பட்டதன் காரணமாக வாக்குப் பதிவு விகிதம் உயா்ந்துள்ளதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், முதல் முறை வாக்காளா்கள், இளம் வாக்காளா்கள் பெரும்பாலும் ஆா்வமுடன் முன் வந்து வாக்களித்ததாலும் வாக்குப் பதிவு விகிதம் உயா்வுக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

சீல் வைப்பு: மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் 7 மணிக்குள் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து சீல் வைக்கப்பட்டன. பின்னா், காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

 தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் வியாழக்கிழமை மாலை வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பெட்டிக்கு சீல் வைக்கும் அலுவலா்கள்.

தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் வியாழக்கிழமை மாலை வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பெட்டிக்கு சீல் வைக்கும் அலுவலா்கள்.

ஓய்வுபெற்ற  ஆசிரியா் யு. அய்யாதுரை (86).

ஓய்வுபெற்ற ஆசிரியா் யு. அய்யாதுரை (86).

  தஞ்சாவூா் அருகே ஆலக்குடி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளா்கள்.

தஞ்சாவூா் அருகே ஆலக்குடி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வாக்காளா்கள்.