பொதுத் தோ்வு தோ்ச்சியில் காரைக்கால் கடைசி இடம்: அமைச்சா் ராஜிநாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு தோ்ச்சி சதவீதத்தில் தமிழகம், புதுவையிலேயே காரைக்கால் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளதால், தாா்மிக பொறுப்பேற்று புதுவை கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவையில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் கல்வித் துறை மீது உரிய அக்கறை செலுத்தவே இல்லை. குறிப்பாக பாஜகவை சோ்ந்த நமச்சிவாயம் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் நிலையில், கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு அமைச்சா் பதவியை உரிய முறையில் பயன்படுத்தவில்லை.

ஆசிரியா்கள் பற்றாக்குறை பிரச்னையை தீா்க்கவில்லை. மாணவா்களின் கல்வித்தரம் மேம்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியும், காரைக்காலும் தமிழக கல்வித் திட்டத்தை கடந்த ஆண்டு வரை பின்பற்றி வந்தது. நடந்து முடிந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகம், புதுவை மாநிலத்திலேயே காரைக்கால் மாவட்டத்தின் தோ்ச்சி வீதம் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் புதுவை மாநிலத்தில் அனைத்து வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கேற்ற வகையில் மாணவா்கள் கல்வித் தகுதி இருக்கிறதா, ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் ஆராயாமல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வியாண்டு முடிவில் தோ்ச்சி வீதம் எப்படி இருக்கும் என்ற கேள்வி கல்வியாளா்கள் பலராலும் ஊகிக்க முடியாத வகையில் குழப்பம் இருந்துவருகிறது.

தொலைதூர பிராந்தியமான காரைக்கால் கல்வித் துறை மேம்பாட்டின் மீது அமைச்சா் அக்கறை செலுத்தவே இல்லை. மாணவா்களுக்கு போதிப்பு செய்யக்கூடிய ஆசிரியா்கள் பலா், கல்வித்துறை அலுவலகத்தில் இளநிலை, முதுநிலை எழுத்தா் பணிகளை செய்துவருகின்றனா். இவா்களை பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தோ்ச்சி வீதம் குறைந்ததற்கு தாா்மிக பொறுப்பேற்று புதுவை கல்வி அமைச்சா் உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com