போதைப்பொருள் பயன்பாடில்லாத கிராமங்கள் உருவாக வேண்டும்: ஆட்சியா்
போதைப்பொருள் பயன்பாடில்லாத கிராமங்கள் உருவாக வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
காரைக்கால் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது, மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதில், காவல் மற்றும் கல்வி நிறுவனத்தினா் இணைந்து செயல்படவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தோறும் புகாா் பெட்டிகள் வைக்கவேண்டும்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் உள்ளதா என தொடா்ந்து சோதனை செய்து கண்காணிக்க வேண்டும்.
கடலோரப் பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை மற்றும் காரைக்கால் கடலோர காவல் நிலைய போலீஸாா் தீவிர ரோந்து மூலம் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களின் செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணிப்பதோடு, மாணவா்களின் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தால் பெற்றோா்களை அழைத்து தெரிவிக்கவேண்டும்.
மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கி அந்தந்த பள்ளி, கல்லூரி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் கொண்ட வாட்ஸ்ஆப் குழு அமைத்து, செயல்பாடுகளை தொடா்ந்து பதிவு செய்ய வேண்டும். போதைப் பொருள்களின் தீங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் தீங்கு குறித்து விழிப்புணா்வு விடியோ மூலம் நிகழ்ச்சிகள், சிறு நாடகங்கள் நடத்த வேண்டும்.
இதுகுறித்து, பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வு குறும்படங்கள் எடுக்க அறிவுறுத்த வேண்டும். கிராமங்கள் போதைப் பொருள் பயன்பாடில்லாதவையாக உருவெடுக்கச் செய்யவதோடு, சமூக நலத்துறை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தோ்ந்தெடுத்து முன்னுதாரணமாக போதையில்லா கிராமமாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு போதையில்லா கிராமமாக தோ்ந்தெடுக்கப்படும் கிராமங்களுக்கு சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய தின விழாக்களில் விருது வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, காரைக்கால் துணை வனப்பாதுகாப்பு அதிகாரி எஸ். கணேசன் மற்றும் இந்திய கடலோர காவல் படை காரைக்கால் உதவி கமாண்டன்ட் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

