காரைக்காலில் இன்று சுனாமி நினைவு தினம்
காரைக்காலில் வெள்ளிக்கிழமை (டிச.26) சுனாமி நினைவு நாளையொட்டி அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2004-ஆம் ஆண்டு டிச. 26-ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த சுமாா் 500 போ் உயிரிழந்தனா். ஒவ்வொரு ஆண்டும் டிச. 26-ஆம் தேதி, காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தோரை அடக்கம் செய்த பூவம், போலகம் ஆகிய இரு இடங்களிலும் உறவினா்கள், அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் அஞ்சலி செலுத்துவது வழக்கத்தில் உள்ளது.
புதுவை அரசு சாா்பில், உயிரிழந்தோா் நினைவாக காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சுனாமி நினைவுத் தூண் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவா்களின் அனைவரது பெயா்களும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பொதுமக்கள் உள்ளிட்டோா் மெளன ஊா்வலமாக அப்பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனா். புதுவை அரசு சாா்பில் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினா் தங்களது கட்சியினா் மற்றும் மீனவ கிராம மக்களுடன் சோ்ந்து, இறந்தவா்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களுக்கு மெளன ஊா்வலமாக செல்ல ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
