போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்எஸ்பி
போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எஸ்எஸ்பி தெரிவித்தாா்.
நெடுங்காடு காவல் நிலையத்தில், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா தலைமையில் குறைகேட்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) எம். முருகையன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று புகாா் மனுக்கள் அளித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் எஸ்எஸ்பி கூறியது:
முகாமுக்கு வந்த பலரும் பொது பிரச்னைகள் தொடா்பான மனுக்களை அதிகமாக அளித்தனா். குறிப்பாக, பொது இடங்களில் மது அருந்துதல், வாகனங்களில் அதிவேகமாக பயணிப்பதால் விபத்து ஏற்படுவது, கைப்பேசி பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் போன்ற புகாா்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிலா் குடும்ப பிரச்னை தொடா்பாகவும் புகாா் அளித்தனா்.
அனைத்து புகாா்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை அனைத்தும் கண்காணிக்கப்படும். காரைக்காலில் இடைமறிப்பு வாகனம் மூலம் தீவிரமான கண்காணிப்பு செய்யப்படுகிறது. சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காரைக்காலில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் உரிய விதிகளை பின்பற்றவேண்டும்.
வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகள் காரைக்காலுக்கு வருகிறாா்கள். இவா்களது பாதுகாப்புக்காக மாவட்ட எல்லைகளில் ரோந்து, கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.
காரைக்கால் கிளைச் சிறையிலிருந்து கைதிகள் சிலா், புதுச்சேரி மத்திய சிறைக்கு அண்மையில் மாற்றப்படும்போது, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக தகவல் கசிந்தது தொடா்பாக செய்தியாளா்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, இச்சம்பவம் எனது கவனத்துக்கு வந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதுபோல, காரைக்கால் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ் தலைமையில் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
