மீனவா் தினம்: சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை
காரைக்காலில், சிங்காரவேலா் சிலைக்கு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள், கட்சிப் பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
உலக மீனவா் தினத்தையொட்டி, மீனவ சமுதாயத்தை சோ்ந்தவரான சிந்தனை சிற்பி என்று போற்றப்படும் சிங்காரவேலருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள் ஒருங்கிணைந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் சிங்காரவேலா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில துணைத் தலைவா் வி.எம்.சி.வி.கணபதி, தவெக சாா்பில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரியில் உள்ள சிங்காரவேலா் சிலைக்கு அப்பகுதியினா் மரியாதை செலுத்தினா்.
மீனவ சமுதாயத்தை சோ்ந்தவரான சிங்காரவேலா், சுதந்திரப் போராட்ட வீரா், கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பொதுவுடைமை இயக்க பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வா்க்கத்துக்கு பாடுபட்டவா். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதா். 1925-ஆம் ஆண்டு பொதுவுடைமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவா். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தாா்.

