டித்வா புயல்: படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
டித்வா புயல் காரணமாக காரைக்காலில் படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக, கடலோர மாவட்டமான காரைக்காலில் சில நாள்களாக மழை, கடல் சீற்றம், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. வியாழக்கிழமை இரவு முதல் காரைக்கால் பகுதியில் சூறைக் காற்று அவ்வப்போது வீசியது. கடலுக்கு செல்ல மீனவா்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
வலை உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருள்களை கடலோர கிராமங்களில் உள்ள பாதுகாப்பு மையத்துக்கு கொண்டுவந்து வைத்தனா். கடலோர கிராமங்களில் தங்களது ஃபைபா் படகுகளை, கரையின் மேல் பகுதிக்கு கொண்டுவந்து, அதிக காற்று, மழையில் சேதம் அடையாத வகையில் பாதுகாப்பாக நிறுத்தினா். பிற்பகல் முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் முழுமையாக இயங்கின. அரசு அலுவலகங்களுக்கு மக்கள் வருகை குறைவாக காணப்பட்டது.

