காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு அமைச்சருக்கு புதுவை முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது: கீழகாசாக்குடியைச் சோ்ந்த ராஜா, சக்திவேல், மதியழகன், முருகன், பிரதீப், வேலாயுதம், காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ், சந்திரநாத், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த செல்வமணி, காளிக்குப்பத்தைச் சோ்ந்த ரஞ்சித், மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி திருமுல்லைவாசலைச் சோ்ந்த ஜான் சினா ஆகிய 11 போ் விசைப் படகில் காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
கடந்த 1-ஆம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி மீனவா்களை படகுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

