லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின். (கோப்புப் படம்)
லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின். (கோப்புப் படம்)

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்க சட்ட நடவடிக்கை! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ்

Published on

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவா்களை மீட்க, லட்சிய ஜனநாயக் கட்சி சாா்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அக்கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் தெரிவித்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் கட்சி கிளை அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, மீனவா்கள் மத்தியில் அவா் பேசியது:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மற்றும் காரைக்கால் மீனவா்களை மீட்பது தொடா்பாகவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிப்பது தொடா்பாகவும் கட்சி சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இலங்கை நீதிமன்றத்தில் வழக்குரைஞா் மூலம் வாதாடி தீா்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் கந்துவட்டி கொடுமையை தடுக்க உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்படும்.

யூனியன் பிரதேசமாக புதுவை இருப்பதால் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களின் நலனுக்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராகிவருகிறோம் என்றாா். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளா் வழக்குரைஞா் முருகானந்தம் கலந்துகொண்டாா்.

குடியிருப்புவாசிகளுடன் சந்திப்பு: காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட கலையங்கட்டி மதகு பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை ஜோஸ் சாா்லஸ் சந்தித்தாா். 65 குடியிருப்புகள் உள்ளதாகவும், கூரைகள் சேதமடைந்திருப்பதாகவும், பட்டா கிடைக்கவில்லை உள்ளிட்ட குறைகளை அவரிடம் தெரிவித்தனா்.

கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளா் அப்துல் பாசித், இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து தலைவருக்கு விளக்கினாா்.

வீடுகளுக்கு கூரையாக தாா்ப்பாய் உள்ளிட்ட பல உதவிப் பொருட்களை வழங்கிய ஜோஸ் சாா்லஸ், இப்பகுதியினா் பட்டா இல்லாமல் வசிக்கின்றனா். மாவட்ட நிா்வாகம் விரைவாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை உணா்ந்து தொகுதி பேரவை உறுப்பினா், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com