சனிப்பெயா்ச்சி விழா: காரைக்கால் - பேரளம் பாதையில் 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்


திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி புதிதாக அமைக்கப்பட்ட காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (மாா்ச் 6, 7) இரண்டு நாட்கள் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநள்ளாற்றில் உள்ள தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி வெள்ளி மற்றும் சனிக்கிழமை விழுப்புரம் - நாகப்பட்டினம் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரயில் காரைக்கால் - திருநள்ளாறு -பேரளம் ரயில் பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
இந்த ரயில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை 9.10-க்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1.05 மணிக்கு நாகை சென்றடைகிறது. நாகையில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது.
இந்த ரயில் பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூா், கடலூா், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில் 2 நாட்களும் புதுச்சேரி - விழுப்புரம் மெமு ரயில் விரிவாக்கமாக இயக்கப்படும். எனவே பயணிகள் புதுச்சேரியில் இருந்து நேரடியாக நாகப்பட்டினத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...