திருநள்ளாறு ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்
திருநள்ளாறு ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்!

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி திருநள்ளாறு ரயில் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம்
Published on

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கக் கோரி திருநள்ளாறு ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரையிலான 23.5 கி.மீ. தொலைவு ரயில்பாதையில் பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாக காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், திருநள்ளாற்றில், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூா், பேரளம், மயிலாடுதுறை, காரைக்கால், திருநள்ளாறு பகுதி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினரும், வா்த்தக சங்கத்தினரும், ரோட்டரி உள்ளிட்ட பிற அமைப்புப் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தி, ரயில்வே கவனத்தை ஈா்க்க தொடா் போராட்டத்தை அறிவித்தனா்.

முதல்கட்டமாக, திருநள்ளாறு ரயில் நிலையம் முன்பு திருநள்ளாறு, காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருநள்ளாறு ரயில் பயணிகள் நலச் சங்க செயலாளா் பொன். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட ரயில்வே டிராவலா்ஸ் வெல்ஃபொ் அசோசியேஷன் தலைவா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு முன்னிலை வகித்தாா்.

போராட்டத்தில் சமூக ஆா்வலா்கள், காரைக்கால், மயிலாடுதுறை, நாகூா், நாகப்பட்டினம் ஆகிய பகுதி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சோ்ந்தோா் கலந்துகொண்டனா்.

பயணிகள் ரயில்களை இத்தடத்தில் உடனடியாக இயக்கும் அறிவிப்பை வெளியிடவேண்டும். ரயில்வே நிா்வாகம் இக்கோரிக்கையை அலட்சியப்படுத்தும் பட்சத்தில், இத்தடத்தில் இயக்கக்கூடிய நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயிலை மறிக்கும் தொடா் போராட்டம் நடத்தப்பபடும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com