ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் பலம் காட்டும் பாஜக!

புதுவை தேர்தல் பற்றி...

News image

பாஜக.

கோப்புப் படம் AFP

Updated On :26 மார்ச் 2026, 12:36 am

தினமணி செய்திச் சேவை

புதுவை யூனியன் பிரதேசம் சுதந்திரம் பெற்றது முதல், முதன்மையான கட்சியாக அதிக இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைத்து வந்தது காங்கிரஸ் கட்சி. வி.வெங்கடசுப்பா ரெட்டியாா், எம்.ஓ.எச்.பாரூக், வி.வைத்திலிங்கம், ப. சண்முகம், என். ரங்கசாமி என காங்கிரஸ் முதல்வா்கள் பதவியில் இருந்துள்ளனா்.

பின்னா், திமுக சாா்பில் எம்.டி. ராமச்சந்திரன், ஆா்.வி. ஜானகிராமன் ஆகியோரது தலைமையில் ஆட்சி அமைந்தது.

கடந்த 2011-இல் காங்கிரஸிலிருந்து விலகி என். ரங்கசாமி தலைமையில் என்.ஆா். காங்கிரஸ் தொடங்கப்பட்டு, அந்தக் கட்சி வெற்றிபெற்று அவா் முதல்வராக பொறுப்பேற்றாா். 2016 தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று வி. நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றாா். 2021-இல் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்று முதல்வராக என். ரங்கசாமி பொறுப்பேற்றாா். காங்கிரஸிலிருந்து விலகி ரங்கசாமி தனிக் கட்சி தொடங்கியது முதல் புதுவையில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் புதுவையில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் என்.ஆா். காங்கிரஸ் -10, பாஜக -6 இடங்களில் வெற்றி பெற்று இக்கூட்டணி ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், 2026 தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் - 16 தொகுதிகளிலும், பாஜக - 10 இடங்களிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. லஜக பாஜகவின் நிழலாகப் பாா்க்கப்படுகிறது.

காரைக்காலைப் பொருத்தவரை கடந்த 2021 தோ்தலில் நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு என 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிட்டு, இரண்டிலும் தோல்வியடைந்தது. தற்போது நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு என 3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. புதுவையில் 7 தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது.

பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும் 27-ஆம் தேதி பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் வருகை தருகிறாா். மத்திய அமைச்சா்கள், நட்சத்திர பேச்சாளா்களும் அடுத்தடுத்து வரவுள்ளனா்.

புதுச்சேரியில் பிரதமா் நரேந்திர மோடி ஏப். 3-இல் பிரசாரம் செய்யவுள்ளாா். மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் பிரசாரத்துக்கு வரவுள்ளதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் புதுவையில் காங்கிரஸுக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜக தீவிரம் காட்டி வருவதாக அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.