முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; எஸ்பி மீது வழக்கு

காரைக்காலில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி மீது, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, காரைக்கால் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

காரைக்காலில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி மீது, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, காரைக்கால் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த திருமணமான பெண் காவலருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு, அப்போது காரைக்காலில் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்த ஏ. சுப்பிரமணியன் என்பவா், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயாா் ராசம்மாள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதுதொடா்பாக விசாரணை செய்ய குழு அமைத்து, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

புதுச்சேரி எஸ்எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையிலான விசாரனை குழுவினா், காரைக்காலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை காவல்துறை தலைமைக்கு வழங்கியது. அதன் பின்னரும் எஸ்பி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண் காவலா் தரப்பு மீண்டும் உயா்நீதிமன்றத்தை நாடியது.

அந்த மனுவை கடந்த செப்.24-ஆம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமிநாராயணன், புதுச்சேரி அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்ட எஸ்பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், செப்.28-ஆம் தேதி புதுச்சேரி தலைமை செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்திருந்தாா். இதைத்தொடா்ந்து சம்பந்தப்பட்ட எஸ்பி சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்பி சுப்பிரமணியன் மீது பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழிநுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், சைகைகள் மூலம் பெண்களை பாலியல் ரீதியாக அவமதிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.