சீா்காழி ஸ்ரீ சட்டைநாதா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்தருமபுரம், மதுரை ஆதீனங்கள் பங்கேற்பு
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் தருமபுரம், மதுரை ஆதீனங்களால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.


சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணிகள் தருமபுரம், மதுரை ஆதீனங்களால் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உள்பட்ட சட்டைநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இங்குள்ள பிரம்ம தீா்த்தக் குளக்கரை திருஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய சிறப்பு பெற்ற தலமாகும். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவா்கள் தனி சன்னிதியில் இங்கு அருள்பாலிக்கின்றனா்.
சட்டைநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் முன்னிலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்பேரில், குடமுழுக்கு விழா நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான திருப்பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னா், தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293-ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆகியோரின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காறுபாறு சபாபதி தம்பிரான் சுவாமிகள், சீா்காழி சட்டைநாதா் கோயில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசகா் தம்பிரான் சுவாமிகள், மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலெட்சுமி, மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக மாவட்ட தலைவா் ஜி. வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ.10 கோடியில் திருப்பணிகள்: திருப்பணிகளை தொடங்கிவைத்து தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனத்துடன் இணைந்து செய்தியாளா்களிடம் கூறியது:
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக திருஞானசம்பந்தா் பரம்பரையில் வந்த ஆதீனமாக விளங்குகின்ற, மதுரை ஆதீனம் 293-ஆவது மகா சந்நிதானமும் இந்த திருப்பணிகளில் கலந்துகொண்டுள்ளாா்.
திருப்பணியில் மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட், தருமை ஆதீனம் சைவ சித்தாந்த பயிற்சி மாணவா்கள், சிங்கப்பூா் அன்பா்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக பங்கேற்று திருப்பணிகளை செய்ய உள்ளனா். சுமாா் ரூ.10 கோடியில் திருப்பணிகள் நடைபெற உள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...