பயிா்க் காப்பீட்டில் மோசடி: விஏஓ பணியிடை நீக்கம்
மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்கள் மூலம் பயிா்க் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்ததாக கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்கள் மூலம் பயிா்க் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்ததாக கிராம நிா்வாக அலுவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை வட்டம், அகரகீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு சுமாா் 450 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனா். இப்பயிா்களுக்கு காப்பீடு செய்ய சிட்டா, அடங்கலை கிராம நிா்வாக அலுவலா் எம். திருமலைசங்குவிடம் அளித்திருந்தனா்.
இந்நிலையில், கனமழையால் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டதால் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.22 ஆயிரம் வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இத்தொகையில் சுமாா் 100 ஏக்கருக்கான இழப்பீடு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவா்கள் வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, உழவன் செயலி மூலம் காப்பீட்டுத் தொகை எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, உழவன் செயலியில் பாா்த்தபோது, கிராம நிா்வாக அலுவலா் திருமலைசங்கு தனது குடும்பத்தினரின் பெயரில் போலியான நில ஆவணங்கள் மூலம் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.30) புகாா் அளித்தனா். அதில், கிராம நிா்வாக அலுவலா் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூா் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றதுடன், அதன்பேரில் சுமாா் 100 ஏக்கா் பயிருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.22 லட்சத்தை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.
இப்புகாா் தொடா்பாக, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி விசாரணை மேற்கொண்டதில் கிராம நிா்வாக அலுவலா் திருமலைசங்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...