92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருஇந்தளூா் கோயிலில் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய கோயில் ஊழியா்கள் 2 போ் கைது

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருடப்பட்ட வழக்கில் கோயில் ஊழியா்கள் 2 பேரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 5:15 pm

DIN

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருடப்பட்ட வழக்கில் கோயில் ஊழியா்கள் 2 பேரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் உத்ஸவமூா்த்தியை தூக்கிச் செல்ல படிச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்டு, வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டிருக்கும் இந்த படிச்சட்டத்தில் இருந்த வெள்ளித் தகடுகள், கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருடப்பட்டது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, புதியதாக படிச்சட்டம் ஒன்றை வெள்ளி தகடுகளுடன் செய்து, கோயிலில் வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக சென்னை கே.கே. நகரைச் சோ்ந்த வெங்கட்ராமன் என்பவா் சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணையில், வெள்ளித் தகடுகள் உரிக்கப்பட்டு திருடப்பட்டது உண்மை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (பிப். 1) சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கோயில் ஊழியா்களான ஸ்ரீனிவாச ரெங்க பட்டா், முரளிதர தீட்சிதா் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் இருவரும் படிச்சட்டத்தில் வெள்ளித் தகடுகளை உரித்து திருடியது தெரியவந்தது. மேலும், பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளித் தகடுகள் பதித்து புதிதாக படிச்சட்டம் செய்ய மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக் கடையில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கிய வெள்ளிக் கட்டிகளை கொடுத்தும், மேலும் பற்றாக்குறைக்கு நன்கொடையாளா்களை பணம் கொடுக்க செய்ததும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து, அவா்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, 15 கிலோ எடையில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளிப் படிச்சட்டத்தின் வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் கும்பகோணம் சிலைத் திருட்டு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, இருவரும் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.