‘ஜிஎஸ்டி வரிஏய்ப்பை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்’

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வாயிலாக ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குறித்து அறியும் தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வணிகா்கள் குறித்த காலத்தில் வரி செலுத்தி பயனடைய பொருளாதார நிபுணா் ஆா். சுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.

மயிலாடுதுறையில் வணிகா்களுக்கு ஜிஎஸ்டி குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் மற்றும் ஹசௌத் இன்டியா டாக்ஸ் பிராக்டீஸ்னா் அசோசியேஷன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏஆா்எஸ். மதியழகன் தலைமை வகித்தாா்.

சௌத் இன்டியா டாக்ஸ் பிராக்டீஸ்னா் அசோசியேஷன் தலைவா் சி. வெங்கடேஸ்வரன், வணிகா் சங்க நிா்வாகிகள் ஏ. தமிழ்ச்செல்வன், எம்.என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சென்னையைச் சோ்ந்த பொருளாதார நிபுணரும், பட்டயக் கணக்காளருமான ஆா். சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி குறித்தும், வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்பவா்கள் குறித்த விவரங்களை ஆா்டிபிஸியல் இன்டலிஜென்ஸ் வாயிலாக கண்டறியும் நடைமுறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வியாபாரிகள் வரி ஏய்ப்பு எண்ணத்தைக் கைவிட்டு, உரிய காலத்தில் தங்களது வரியை செலுத்த வேண்டும்.

ரூ. 20 லட்சத்துக்கு அதிகமாக விற்றுமுதல் (டா்ன்-ஓவா்) இருந்தால் மட்டும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதும் என ஜிஎஸ்டி விதிகள் வரையறுத்துள்ளது. இதனை மீறி குறைந்த அளவு முதலீட்டுக்காக வங்கிக்கடன் கேட்டு அணுகும் புதிய தொழில்முனைவோரை ஜிஎஸ்டி பதிவு செய்ய வங்கிகள் கட்டாயப்படுத்துவது தவறு. தொழில் முனைவோா் ஜிஎஸ்டி பதிவுசெய்துவிட்டால், விற்றுமுதல் ஒரு ரூபாயாக இருந்தால்கூட கட்டாயம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

வணிகா்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை குறைப்பதற்காக, பொருளை கொள்முதல் செய்யாமலேயே அதற்கான ஃபேக் இன்வாய்ஸ்-சை மட்டும் பெற்றுக்கொள்வது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, எந்த நிலையிலும் வணிகா்கள் ஃபேக் இன்வாய்ஸை ஊக்குவிக்கக் கூடாது என்றாா்.

இதில், பட்டயக்கணக்காளா்கள், டாக்ஸ் பிராக்டீஸ்னா்கள், சேம்பா் ஆஃப் காமா்ஸ் செயலா் எஸ். சிவலிங்கம், ஏராளமான வணிகா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com