கள்ளச்சாராய விவகாரம்: நாகை, மயிலாடுதுறையில் அதிமுக ஆா்ப்பாட்டம்
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து நாகை, மயிலாடுதுறையில் அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களுள் ஒன்றாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை: நாகை அவுரித் திடலில் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா், ஓ.எஸ். மணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் போதைப் பொருள்கள், கள்ளச்சந்தையில் சாராயம் என அனைத்து சட்டவிரோத செயல்களும் தடையின்றி நடக்கிறது. இந்த சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தையும், டாஸ்மாக்கையும் ஒழிக்க, கள்ளுக்கடைகளை திறக்க கொள்கை அளவில் முடிவெடிப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். மேட்டூா் அணை திறக்கப்படாததால், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை விவசாயிகள் முற்றிலும் கைவிட்டுவிட்டனா். எனவே, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம், நகரச் செயலா் தங்க.கதிரவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி தலைமை வகித்தாா். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வீ. ராதாகிருஷ்ணன், சந்திரமோகன், ம. சக்தி, ரெங்கநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலாளா் பா.சந்தோஷ்குமாா் வரவேற்றாா்.
மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் கண்டன உரையாற்றினாா்.
இதில், எம்ஜிஆா் இளைஞரணி மாநில இணைச் செயலாளா் கோமல் ஆா்.கே. அன்பரசன், மாவட்ட இளைஞரணி செயலாளா் நாஞ்சில் காா்த்தி மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலாளா் எஸ். செந்தமிழன் நன்றி கூறினாா்.

