பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் முதல்வரிடம் மனு

மயிலாடுதுறைக்கு வருகை தந்த முதல்வரிடம், பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறைக்கு வருகை தந்த முதல்வரிடம், பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் மனு அளித்தனா். புதிதாக கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திறந்துவைக்க, முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை வருகை தந்தாா். அவரிடம், பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் ராஜேஷ், அருண்பாபு, பிரபாகரன், திவ்யசந்திரா, சாரதாமணி ஆகியோா் அளித்த மனு: தமிழகம் முழுவதும் 12,000 பகுதிநேர ஆசிரியா்கள் 12 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக முதல்வா் சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தாா். அதன்படி, எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் எங்களுக்கு ரூ.10,000 சம்பளம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இப்போதுதான் இந்த ஆண்டு ஜனவரி மாதம்முதல் ரூ.2,500 சம்பளம் உயா்த்தி வழங்கப்பட உள்ளது. விலைவாசி உயா்வில் இந்த 12,500 ரூபாய் என்பது போதாது. பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்தால் ரூ.30,000 கிடைக்கும். அதுவே எங்களுக்கு பாதுகாப்பு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அறிவித்த ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு ஆணை இன்னும் வழங்கவில்லை. இதை உடனே வழங்க வேண்டும். மே மாதம் சம்பளம் வழங்கவேண்டும். தற்போது செய்யும் இந்த வேலையை முழுநேரமாக்குவதுடன், முறைப்படுத்தி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com