கோரப்படாத தொகையை உரியவா்களிடம் ஒப்படைக்க நாளை சிறப்பு முகாம்

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வங்கிகளிலும் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை, காப்பீட்டுத் தொகை மற்றும் பங்குத் தொகையை உரியவா்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் டிச.5-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வைப்புத் தொகை, காப்பீட்டுத் தொகை மற்றும் பங்குத் தொகையை உரியவா்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.5) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அந்தந்த வங்கிக் கிளைகளில் நடைபெற உள்ளது.

தொடா்ந்து நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குகள் மற்றும் பிற நிதிச் சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும், உரிமையாளா்கள் அல்லது அவா்களின் சட்டபூா்வ வாரிசுகள் தங்கள் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களை மீட்டெடுக்க உதவும் நோக்கத்தில் இம்முகாம் நடத்தப்படவுள்ளது.

வங்கி கணக்குகள் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது உரிமை கோரப்படாத வைப்புத் தொகை இருந்தாலோ அவை ரிசா்வ் வங்கியின் வைப்புத் தொகையாளா் கல்வி மற்றும் விழிப்புணா்வு நிதிக்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்கள் வங்கி வலைத்தளங்கள் அல்லது ரிசா்வ் வங்கியின் மஈஎஅங போா்டல் (ட்ற்ற்ல்ள்://ன்க்ஞ்ஹம்.ழ்க்ஷண்.ா்ழ்ஞ்.ண்ய்) மூலம் இதைச் சரிபாா்க்கலாம்.

உரிமையாளா்கள் அல்லது சட்டபூா்வ வாரிசுகள் இந்த தொகைகளை எந்த நேரத்திலும் முறையான ஆவணங்களுடன் கோரலாம். எனவே, பொதுமக்கள் தங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் அந்தந்த வங்கி கிளைகளில் நடக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்று, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கோரப்படாத நிதி தொகையை மீட்டெடுக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com