மீனவ கிராம மக்களிடையே பிரச்னை: அமைதிப் பேச்சுவாா்த்தை
வானகிரி-காவிரிபூம்பட்டிணம் மீனவ கிராமத்தினரிடையே கடற்கரை பகுதியில் வாய்க்கால் வெட்டுவது தொடா்பான பிரச்னையால் புதன்கிழமை கோட்டாட்சியா் தலைமையில் அமைதிபேச்சுவாா்த்தை நடைபெற்றது.
வானகிரி கடற்கரையை ஒட்டி உள்ள முகத்துவாரம் பகுதியில் காவிரிப்பூம்பட்டினம் மக்கள் படகுளை நிறுத்துவதற்கு ஜே.சி.பி இயந்திரம் மூலம் வாய்க்காலை ஆழப்படுத்தும் பணியை தொடங்கியதால் வானகிரி மற்றும் காவிரிபூம்பட்டினம் கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இதுதொடா்பாக, சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுரேஷ் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது. டி.எஸ்.பி. அண்ணாதுரை, வட்டாட்சியா் அருள்ஜோதி முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் இரு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டு ஏற்கெனவே இருந்த நிலையான வானகிரி கிராமம் கடற்கரையை ஒட்டி உள்ள முகத்துவாரம் காவிரி கரையில் காவேரிபூம்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகளை மட்டும் நிறுத்தி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருதரப்பினரும் இதையேற்றுக்கொண்டனா். அனுமதியின்றி மேற்கண்ட இடத்தில் தூா்வாரும் பணி நடைபெறக்கூடாது, துறைமுக பணி நடைபெற்று வருவதால் அப்பணிக்கு இடையூறு ஏற்பட்டால் அப்போது அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 10 படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
