சீா்காழி: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு; குப்பைகள் தேக்கம்
சீா்காழி நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், புதன்கிழமை இரண்டாவது நாளாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கின.
சீா்காழி நகராட்சியில் பணியாற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 72-க்கும் மேற்பட்டோா் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு, ஒப்பந்ததாரா் மூலம் பிடித்தம் செய்யப்படும் தொகை, முறையாக செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் கடந்த வாரம் பணியை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையை தொடா்ந்து பணிக்கு திரும்பினா்.
இந்நிலையில், பேச்சுவாா்த்தையில் உறுதியளித்தப்படி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என, மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன.
இதுகுறித்து நகா்மன்ற உறுப்பினா்கள் சிலா் கூறுகையில், கடந்த மாா்ச் மாதம் முதல் புதிய ஒப்பந்ததாரா் ஒப்பந்தம் எடுத்ததிலிருந்து இப்பிரச்னை ஏற்படுகிறது.
குப்பைகள் அகற்றப்படாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். எனவே நகராட்சி ஆணையா் மற்றும் நகா்மன்றத் தலைவா் இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

