காவிரி துலாக் கட்டத்தில் கடைமுகத் தீா்த்தவாரி
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவத்தையொட்டி, காவிரி துலாக் கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைமுகத் தீா்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகா்த்தா்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.
பக்தா்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீராடியதால் பாவச் சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி, தனது பாவச்சுமை நீங்க இறைவனிடம் வேண்டியதாகவும், மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் நீராடி விமோசனம் பெற சிவபெருமான் கங்கைக்கு அருளியதாகவும் ஐதீகம்.
அந்த வகையில், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடிச் செல்வா்.
அந்த வகையில், காவிரி துலாக்கட்டத்தில் கடைமுகத் தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பல்வேறு கோயில்களில் இருந்து காலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயில், ஐயாறப்பா் கோயில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான துலாக்கட்ட காசி விஸ்வநாதா், தெப்பக்குளம் காசி விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் துலாக்கட்ட காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வதான்யேஸ்வரா் கோயில், தனியாா் கோயிலான காசி விஸ்வநாதா் கோயிலில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரியின் வடக்குக் கரையிலும் எழுந்தருளினா்.
இதேபோல, படித்துறை விஸ்வநாதா், இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான பரிமள ரங்கநாதா் கோயிலில் இருந்தும் உற்சவ மூா்த்திகள் காவிரிக் கரையில் எழுந்தளச் செய்யப்பட்டனா்.
துலாக் கட்ட காவிரியின் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்குக் கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும், அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவிரியில் புனித நீராடினா். பின்னா், பஞ்சமூா்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

