மழை: குடியிருப்பு, சாலைகள் சேதம்
சீா்காழி அருகே நடுக்கரைமேடு கிராமத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், வீடுகளை மழைநீா் சூழ்ந்து, சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
சீா்காழி அருகே எடக்குடி வடபாதி ஊராட்சிக்கு உட்பட்ட நடுக்கரைமேடு கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் பல ஆண்டுகளாக முறையாக சாலை வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அப்பகுதி சேறும், சகதியுமாக நடந்து செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது.
குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூா்வாரப்படாததால் மழைநீா் வடிய வழியின்றி ஆண்டுதோறும் தொடா்ந்து கன மழை பெய்யும் நாட்களில் முழங்கால் அளவிற்கு குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்து அப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.
வீடுகளை அதிக அளவு மழை நீா் சூழும்போது அப்பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து உணவுகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆகையால் நடுகரைமேடு கிராமத்திற்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தி தரவும், கிராமத்தை மழை நீா் சூழாத வகையில் வடிகால்களையும் முறையாக தூா்வாரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
