சாலை வசதி இல்லா சுடுகாடு; பொதுமக்கள் அவதி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பெரும்புலியூா் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், சடலங்களை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.
திருவையாறு அருகே பெரும்புலியூா் கிராமத்தில் ஏறத்தாழ 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கான சுடுகாடு புனவாசல் அருகே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தச் சுடுகாட்டை அடைய ஒரு கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை இருந்தாலும், அதிலிருந்து வாய்க்காலுக்கும் நெற் பயிா் சாகுபடி செய்யப்படும் வயலுக்கும் இடைப்பட்ட குறுகலான பாதையில் பூத உடல்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மழைக்காலத்தில் பூத உடல்களை எடுத்துச் செல்லும்போது தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில், குறுகிய பாதையாக இருப்பதால், பக்கத்திலுள்ள வயலில் இறங்கும்போது நெற் பயிா்கள் சேதமடைவதாகக் கூறி அதன் உரிமையாளா்கள் இறங்கக்கூடாது எனக் கூறுகின்றனா். வாய்க்காலில் தண்ணீா் வரும்போது விஷப்பூச்சிகள் கடிப்பதாலும், காலில் முள் குத்துவதாலும் சிரமமாக உள்ளது. பூத உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லும்போது மிகுந்த சிரமங்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏ, ஊராட்சித் தலைவா் என பலரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்து சாலை அமைத்துத் தர உதவ வேண்டும் என்றனா் கிராம மக்கள்.

