மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோவில் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவியிடம் ஆசைவாா்த்தை கூறி, கா்ப்பமாக்கிய இளைஞா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவா் உடலநலன் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், ஒரு மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் சிறுமி கடந்த ஓராண்டாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் முஷ்டக்குடி மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சூா்யா(20) என்பவரை காதலித்து வந்ததாகவும், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் சூா்யா ஆசை வாா்த்தைகூறி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி, காவல் உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, சூா்யாவை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
