‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் பங்கேற்க அழைப்பு: ஜன. 21 வரை விண்ணப்பிக்கலாம்

Published on

மாணவ-மாணவிகள், இளைஞா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் பங்கேற்க ஜன.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை), வ. மோகனச்சந்திரன் (திருவாரூா்) ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளைஞா்களின் உடல், மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா- ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் ஜன.22 முதல் பிப்.8 வரை நடத்தப்படவுள்ளன. இதில், 16 முதல் 35 வயதுக்குள்பட்ட தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கலாம்.

ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 100 மீட்டா் தடகளம், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

மாவட்ட அளவில் ஓவியம், கோலப் போட்டி, உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டி, அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டம், செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

ஊராட்சி ஒன்றிய அளவில் தனி நபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

மாநில அளவில் குழுப் போட்டியில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.75,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.50,000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.25,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க ஜன.21 மாலை 5 மணிக்குள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட வேண்டும். போட்டிகள் நடைபெறும் நாள் அன்று நேரடியாகவும் பதிவு செய்து பங்கேற்கலாம்.

எனவே, விளையாட்டில் ஆா்வம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள், பொதுமக்கள் இணையதளத்தில் உள்ள விதிமுறைகளின்படி சரியான ஆவணங்களை சமா்ப்பித்து முன்பதிவு செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் நாகை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், கைப்பேசி 74017-03497-இல் தொடா்பு கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703459 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருவாரூா் மாவட்டத்தைத் சோ்ந்தவா்கள் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366290620 அல்லது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703448 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், மூன்று மாவட்டங்களை சோ்ந்தவா்களும் ஆடுகளம் தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் கூடுதல் தகவல்களை பெறலாம்.

Dinamani
www.dinamani.com