1.5 கிலோ தங்கக் கட்டியுடன் தப்பியோடிய சிறுவன் 3 மணி நேரத்தில் கைது
மயிலாடுதுறையில் தங்க நகை உருக்கும் பட்டறையில் இருந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ தங்கக் கட்டியுடன் தப்பிச் சென்ற சிறுவனை 3 மணி நேரத்தில் தனிப்படை போலீஸாா் பிடித்தனா்.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை மாலை இவா் தனது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவனிடம், தனியாா் நகைக்கடையில் இருந்து பெறப்பட்ட 1.5 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி, துடைத்து வைக்குமாறு கொடுத்துள்ளாா். ஆனால், சிறுவன் அந்த தங்கக் கட்டியை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, சிறுவனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், தங்கக் கட்டியை திருடிச் சென்ற சிறுவனை மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகில் தனிப்படையினா் பிடித்தனா். சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கக் கட்டியை முழுமையாக மீட்டனா். சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தஞ்சாவூா் சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு 3 மணி நேரத்தில் சிறுவனை பிடித்து, தங்கக் கட்டியை பறிமுதல் செய்தமைக்காக டிஎஸ்பி பாலாஜி, காவல் ஆய்வாளா் சிவக்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் நரசிம்ம பாரதி மற்றும் காவல் ஆளிநா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டினாா்.
