நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில், நாகை மீன் இறங்குதளத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை பதிவுச் சான்று உரிமம், பதிவுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
உணவுப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைவரும் டிச. 31-ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாகையில் உணவுப் பாதுகாப்புத் துறை பதிவுச் சான்று மற்றும் உரிமப் பதிவுக்கான சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நாகை மீன் இறங்குதளத்தில் உள்ள மீன்வளத் துறை சேவை மையத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை பதிவுச் சான்று மற்றும் உரிமம் பதிவுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர். மகாராஜன், நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன், கீழையூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம். ஆண்டனிபிரபு ஆகியோர் முகாம் பதிவுகளை மேற்கொண்டனர்.
நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், டாடா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீன் விற்பனையாளர்கள், மீன் இறங்குதளத்தில் தெருவோரக் கடை நடத்துபவர்கள் என சுமார் 80 பேர் உரிமம், பதிவுச் சான்று கோரி இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.