நாகை கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on
Updated on
2 min read

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்குக் கல்லூரித் தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்தார். அரிமா சங்க முன்னாள் ஆளுநர் பி. வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.  கல்லூரி செயலாளர் த. மகேஸ்வரன், இயக்குநர் த. சங்கர்  மற்றும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிலையங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், சிக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தங்க. கதிரவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
பள்ளி முதல்வர் எல். பெனட்மேரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் மாணவர்களின் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 
கீழ்வேளூர் ப்ரைம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜி. கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். ப்ரைம் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஏ.வி. பாலு, சேர்மன் என். கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நாகூர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கினார். பள்ளி ஆட்சி மன்றக் குழுத் துணைத் தலைவர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தலைமை வகித்தார். ஆட்சிக் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மூத்த பட்டதாரி ஆசிரியர் நாகேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளிச் செயலாளர் சுப. சம்பந்தம்,  தலைமை ஆசிரியர் சி. சிவா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர் பங்கேற்ற சுதந்திர தின விழா பேரணி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றியும், தேசப்பற்றை வலியுறுத்தியும் முழக்கங்கள் பேரணியில் எழுப்பப்பட்டன. 
கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திர நாட்டார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் பாலு, கிராமக் கல்விக் குழுத் தலைவர் சி. செளந்தரராஜன் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கீழ்வேளூர், பூலாங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வினோலியா, ஆசிரியர் தங்க. நாகேந்திரன் ஆகியோர் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 
திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அலுவலகப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.