பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி நாகை மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் 36 இடங்களில்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி, நாகை மாவட்டத்தில் 36 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நாகை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்; கடந்த ஆண்டுக்குரிய பயிர்க் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
நாகையில்...
நாகையை அடுத்த ஐவநல்லூர், பாலையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளர் பாண்டியன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
திருமருகலில்...
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் பனங்குடி, நரிமணம், கட்டுமாவடி, எரவாஞ்சேரி, திருக்கண்ணபுரம், சீயத்தமங்கை உள்ளிட்ட 16 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
எரவாஞ்சேரியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ். தமிழரசன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ. சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இரெ.இடும்பையன், முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கீழ்வேளூரில்....
கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.கே.நாகராஜன், மாதர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் எஸ். மேகலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தலைஞாயிறில்....
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் மணக்குடி, ஓடாச்சேரி, அருந்தவப்புலம், பாங்கல், வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பாங்கல் கிராமத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விவசாய சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.எம். மாசிலாமணி, ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய நிர்வாகிகள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஷேக் இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம், தாணிக்கோட்டகம், பஞ்சநதிக்குளம் மேற்கு, பஞ்சநதிக்குளம் கிழக்கு, ஓடாச்சேரி ஆகிய இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டங்களில் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலர் த. நாராயணன், ஒன்றியச் செயலர்கள் சிவகுரு. பாண்டியன், மகேந்திரன், நகரச் செயலர் ராசேந்திரன்,விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோவிலில்...
செம்பனார்கோவிலில் மாவட்ட குழு உறுப்பினர் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில், விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் பெரியசாமி, மாவட்டச் செயலர் சீனிவாசன், ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழியில்...
சீர்காழி அருகே உள்ள அகர எலத்தூரில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க துணைச் செயலாளர் சம்பந்தம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சிவராமன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். மாலை 5 மணியளவில் விவசாயத் தொழிலாளர்கள் சங்க வட்டச் செயலாளர் கஜேந்திரன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.
குத்தாலத்தில்...
குத்தாலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கணபதி, ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் அப்துல் ஹாதி, குத்தாலம் நகர செயலாளர் வ.கோ. ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் தரங்கம்பாடி உள்ளிட்ட நாகை மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





