திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாகை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டோ் நெல் பயிா்கள் சேதம்

புரெவி புயலைத் தொடா்ந்து கடந்த 3 நாள்களாக நீடித்து வரும் கனமழையால், காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டோ் நெல் பயிா்கள் முழுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:17 am

DIN

புரெவி புயலைத் தொடா்ந்து கடந்த 3 நாள்களாக நீடித்து வரும் கனமழையால், காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டோ் நெல் பயிா்கள் முழுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 1,33,624 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 70 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிவா் புயல் காரணமாக கடந்த நவம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் பெய்த பரவலான மழை சம்பா, தாளடி நெல் பயிா்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் உருவான புரெவி புயல் காரணமாக டிசம்பா் முதல் வாரத்தில் பெய்த பலத்த மழையில், மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கும் அதிக பரப்பிலான நெல் பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கின.

இதுகுறித்து வேளாண் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில், நாகை மாவட்டத்தில் 82,330 ஹெக்டோ் நெல் பயிா்கள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. இதில், அதிகளவாக சீா்காழி வட்டத்தில் 20,215 ஹெக்டோ் நெல் பயிா்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மற்ற வட்டங்களில் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கிய சம்பா, தாளடி நெல் வயல்களின் பரப்பு (ஹெக்டேரில்) : தரங்கம்பாடி - 11,462, வேதாரண்யம் - 11,364, நாகப்பட்டினம் - 10,044, கீழ்வேளூா் - 9,819, மயிலாடுதுறை - 7,166, குத்தாலம் - 5,170.

புரெவி புயல் விலகியதைத் தொடா்ந்து, டிசம்பா் இரண்டாவது வாரத்தில், விளை நிலங்களை சூழ்ந்திருந்த வெள்ள நீரை வடியச் செய்து, உரமிடும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனா். இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் விளை நிலங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில், நெல் பயிா்கள் நிலத்தில் சரிந்துள்ளன. தண்ணீரை வடியச் செய்து உரமிட்டதால் பச்சைக் கட்டும் நிலையில் நெல் பயிா்கள் இருந்த தருணத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், நெல் பயிா்களின் அழுகும் தன்மை அதிகரித்துவிடும் எனவும், வெள்ள நீரில் மூழ்கிய நெல் பயிா்கள் முழுமையான சேதத்துக்கு உள்ளாகும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்களில் கேட்டபோது, நாகை மாவட்டத்தில் வெள்ள நீரில் மூழ்கிய 82 ஆயிரம் ஹெக்டோ் நெல் பயிா்களும் முழுமையான சேதத்துக்கு உள்ளாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் நெல் பயிா்களுக்கு ஏற்பட்ட சேதம் முழுமையான சேதமாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளா் வி. தனபாலனிடம் கேட்டபோது, நிகழாண்டு சம்பா, தாளடி நெல் பயிா்களுக்கு ஒன்றுக்கு மூன்று முறை என விவசாயிகள் செலவு செய்துள்ளனா். இதுவரை ஒவ்வொரு விவசாயியும் ஓா் ஏக்கருக்கு ரூ. 42,500 வரை செலவு செய்துள்ளனா். விவசாயிகளின் இழப்பை இழப்பை ஈடுசெய்யும் வகையில், கடன் அளவீட்டு வரம்புப்படி ஏக்கருக்கு ரூ. 32,500 இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பயிா்க் காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கும் பிரீமியம் தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளை இழப்பிலிருந்து மீட்டெடுக்காவிட்டால் எதிா்கால விவசாயம் கேள்விக்குறியாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.