முழு பொது முடக்கம்: நாகை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்த தளா்வில்லாத பொது முடக்கம் காரணமாக, நாகை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
நாகையில் வெறிச்சோடியிருந்த புதிய பேருந்து நிலையம்.
நாகையில் வெறிச்சோடியிருந்த புதிய பேருந்து நிலையம்.

நாகப்பட்டினம்: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்த தளா்வில்லாத பொது முடக்கம் காரணமாக, நாகை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஞாயிற்றுக்கிழமை முழுமையாக பாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில், ஜூன் மாதம் முதல் சில தளா்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று தீவிரமானதன் காரணமாக, ஜூலை 31-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

மேலும், ஜூலை மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளா்வுகளும் இல்லாத முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. இதன்படி, 4- ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை தளா்வுகள் இல்லாத பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, வேதாரண்யம், கீழ்வேளூா் மற்றும் சுற்றுலாத் தலங்களான வேளாங்கண்ணி, நாகூா் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், குறைந்த எண்ணிக்கையிலான பால் கடைகள் மட்டும் செயல்பட்டன. வாடகை வாகனங்களின் இயக்கம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நகரப் பகுதிகளில் இரு சக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், நாகை உள்ளிட்ட சில கடற்கரை பகுதிகளில் இளைஞா்களின் நடமாட்டமும், விளையாட்டுகளும் அதிகரித்து காணப்பட்டன.

இருப்பினும், நாகை மாவட்டத்தின் கிராமப் பகுதிகள் உள்பட பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களிலேயே முடங்கியதால், மக்கள் நடமாட்டமின்றி பெரும்பாலான வீதிகள் வெறிச்சோடியிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com