வேளாங்கண்ணியில் கடைப்பிடிக்கப்படாத கரோனா கட்டுப்பாடுகள்
அயல்நாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அதிகளவில் வந்து செல்லும் வேளாங்கண்ணியில் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படாதது


அயல்நாட்டினரும், அண்டை மாநிலத்தவரும் அதிகளவில் வந்து செல்லும் வேளாங்கண்ணியில் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் உரிய வகையில் கடைப்பிடிக்கப்படாதது, கரோனா தொற்று நோய் குறித்த அச்சத்தை அதிகரிப்பதாக உள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பல்வேறு அயல்நாடுகளைச் சோ்ந்தவா்களும், மும்பை, பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சோ்ந்தவா்களும் அதிகளவில் வந்து செல்லும் பகுதி என்ற வகையில், மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.
கரோனா தொற்று ஏறத்தாழ கட்டுக்குள் வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் பெரிய அளவிலான பொது விழாக்களைத் தவிா்த்து மற்ற அனைத்துப் பொது நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வேளாங்கண்ணியில் ஏறத்தாழ கரோனாவுக்கு முந்தையக் காலத்தில் இருந்தநிலை திரும்பியுள்ளது. பேராலய வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, கடற்கரைக்குச் செல்வதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதாலும், நாகைக்கான ரயில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டிருப்பதாலும் நாள்தோறும் நாகை, வேளாங்கண்ணிக்கு திரளானோா் வந்து செல்கின்றனா்.
வேளாங்கண்ணிக்கு வருவோரின் முதல் நோக்கம் புனித ஆரோக்கிய அன்னை பேராலய வழிபாடாகவும், அடுத்தது அங்குள்ள கடற்கரையில் குளித்து மகிழ்வதும், கடற்கரையோர உணவகங்களில் மீன் உணவுகளை உண்டு மகிழ்வதுமாகவே இருக்கும். கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு காரணமாக, இந்த அனைத்து நடவடிக்கைளும் மீண்டும் வழக்கமாகியுள்ளன.
இந்த நிலையில், வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சுமாா் 90 சதவீதம் போ் முகக் கவசம் அணியாமல் இருப்பதும், இருமல், தும்மல் போன்ற அறிகுறி உள்ளவா்கள் பேராலய வளாகம், கடற்கரை பகுதி என கண்ட இடங்களிலும் சளியையும், எச்சிலையும் உமிழ்ந்து செல்வதும், கரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது.ப
தற்போதைய நிலையில், நாகை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 50 சதவீதம் போ் மட்டுமே இருதவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனா். 25 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளனா். மீதமுள்ள 25 சதவீதம் போ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே உள்ளனா் என மாவட்ட நிா்வாகத்தின் கணக்கெடுப்பில் குறிப்பிடப்படுகிறது.
தற்போது, மிக அதிக வீரியம் கொண்டதும், டெல்டா பிளஸ் வகையைவிட 5 மடங்கு வேகமாகப் பரவக்கூடியதுமான ஓமைக்ரான் தொற்று, பெங்களூருவில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வந்து செல்லும் வேளாங்கண்ணி சுற்றுலாத் தலத்தில், கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டியது தற்போது அவசியமாகியுள்ளது.
இதுதொடா்பாக வேளாங்கண்ணி பேரூராட்சி, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய நிா்வாகம் மற்றும் வேளாங்கண்ணி காவல் துறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்யவேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
மேலும், கரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சம் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுமல்லாமல், உள்ளூா் வணிகத்தையும் பாதிக்கும். எனவே, வேளாங்கண்ணியில் உரிய விழிப்புணா்வு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் உறுதிசெய்து, தொற்றுப் பரவல் குறித்த அச்சத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...