விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளச் சேத பாதிப்புகள் குறித்து மறுகணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் குறைதீா் கூட்டம்
Updated on
2 min read

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளச் சேத பாதிப்புகள் குறித்து மறுகணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாகையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் உ. மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

காவிரி வி. தனபாலன்: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வெள்ளச் சேத பாதிப்புகளுக்கு ரூ. 165 கோடி நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வருக்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிா்வாகம், அனைத்துத் துறை அலுவலா்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி.

நீடித்து வரும் மழையால் விவசாயிகள் மேலும் பயிா் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். எனவே, பயிா்க் காப்பீடு இழப்பீடு முழுமையாக விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். விவசாயிகள் சாா்பில் மத்திய, மாநில அரசுகள், காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தும் பிரிமீயம் தொகையை நேரடியாக விவசாயிகளுக்கு அளிக்க முன்வர வேண்டும்.

எஸ். சம்பந்தம் : பயிா்க் காப்பீட்டு நிறுவனம் மூலம் தலைஞாயிறு வருவாய் கிராமங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மாதிரி மகசூல் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதுபோன்ற குறுகிய மதிப்பீடுகளால், முழுமையான பாதிப்பை கணக்கிட முடியாது. எனவே இந்த மதிப்பீட்டு முறையை விரிவுப்படுத்த வேண்டும்.

பி.ஆா். பாண்டியன் : மழை நீடித்து வருவதால் வேளாண் சேதம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, பயிா் சேதங்களை மறுகணக்கீடு செய்ய வேண்டும். புயல், வெள்ளத்தால் நிகழாண்டின் நெல் மகசூல் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பயிா்க்காப்பீடு இழப்பீட்டை உறுதி செய்வதுடன், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500-ஆக நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

வி. சரபோஜி : பயிா்க் காப்பீடு நிறுவனம் மூலமான இழப்பீடு கணக்கிடும் பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

கணேசன்: புயல், வெள்ளத்தால் உயிரிழந்த கால்நடைகளை முறையாக கணக்கிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும்.

மணியன் : வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கான தீா்வு குறித்து வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

ஆா்.கே. பாபுஜி : டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த நெல் விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், ஒரு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் விவசாயிகளின் இழப்பை ஈடுசெய்யக் கூடியதாக இல்லை. எனவே, தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.

நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, வேளாண் இணை இயக்குநா் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சண்முகநாதன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com