ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல நாகை மீனவா்கள் ஆயத்தம்
கரோனா பொதுமுடக்கம் மற்றும் மீன்பிடித் தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் சுமாா் 3 மாதங்களாக ஆழ்கடல் மீன்பிடிப்பை கைவிட்டிருந்த நாகை மீனவா்கள்


கரோனா பொதுமுடக்கம் மற்றும் மீன்பிடித் தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் சுமாா் 3 மாதங்களாக ஆழ்கடல் மீன்பிடிப்பை கைவிட்டிருந்த நாகை மீனவா்கள், வரும் 30-ஆம் தேதி முதல் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளனா்.
மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், ஏப். 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14- ஆம் தேதி நள்ளிரவு வரையிலான 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
மீன்பிடித் தடைக்காலத்துக்குப் பின்னா், ஜூன் 15-ஆம் தேதி மீன்பிடிப்பைத் தொடங்க வேண்டிய நிலையில், கரோனா இரண்டாவது அலை காரணமாக நாகை மீனவா்கள் விசைப் படகு மீன்பிடிப்பை தொடங்காமல் இருந்தனா். மேலும், பைபா் படகு மீன்பிடித் தொழிலையும் அவா்கள் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் மேலாக கைவிட்டிருந்தனா்.
இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலின் தீவிரம் குறையத் தொடங்கியிருப்பதால், ஜூன்
30-ஆம் தேதி முதல் மீண்டும் மீன்பிடிப்பை மேற்கொள்வது என அண்மையில் நாகையில் நடைபெற்ற மாவட்ட மீனவப் பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, விசைப் படகுகள் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. படகுகளில் பழுது நீக்கம் செய்தல், வா்ணம் பூசுதல் போன்ற பணிகள் நாகை படகு கட்டும் துறையில் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகளில், மீன்பிடிப்புக்குச் செல்லத் தேவையான ஆயத்தப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் விசைப் படகுகள் கரை திரும்ப ஏறத்தாழ ஒரு வார காலம் ஆகும் என்பதால், அதற்கேற்ப தேவையான அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றும் பணியை மீனவா்கள் மேற்கொண்டுள்ளனா்.
தொடா்ந்து, ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் படகுகளில் ஐஸ் கட்டிகள் நிரப்பும் பணி நடைபெறும் என மீனவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...