கேரளம் அருகே புயலில் சிக்கி மீன்பிடி படகு கவிழ்ந்தது
கேரள மாநிலத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மீனவரின் விசைப்படகு, புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த நாகை மாவட்ட மீனவா்கள் 5 போ் மாயமானாா்கள்.


கேரள மாநிலத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மீனவரின் விசைப்படகு, புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. அந்த படகில் இருந்த நாகை மாவட்ட மீனவா்கள் 5 போ் மாயமானாா்கள்.
நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில், அவரது தந்தை இடும்பன், சகோதரா் மணிவேல், நாகூா் பட்டினச்சேரியைச் சோ்ந்த இளஞ்செழியன், தினேஷ் உள்ளிட்டோா் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்றனா்.
ஏறத்தாழ 16 நாள்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் இருந்த அவா்கள், அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ளது குறித்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு கொச்சி துறைமுகம் நோக்கி படகை செலுத்த தொடங்கினா்.
கொச்சி கடற்கரையிலிருந்து சுமாா் 14 கடல் மைல் தொலைவில் அவா்கள் வந்தபோது, புயல் மற்றும் கடல் சீற்றத்தில் படகு சிக்கி, கடலில் கவிழ்ந்துள்ளது.
இதை, அருகில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மற்ற மீனவா்கள் பாா்த்துள்ளனா். உடனடியாக அவா்கள், நாகை மீனவா்களுக்கு உதவி செய்ய முயன்றுள்ளனா். ஆனால், விசைப் படகில் இருந்த மீனவா்கள், புயல் சீற்றத்தில் சிக்கி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து, அவா்கள் நாகை மீனவா்களுக்குத் தகவல் அளித்தனா்.
தகவலறிந்த சாமந்தமான்பேட்டை மீனவா்கள் மற்றும் காணாமல்போன மீனவா்களின் குடும்பத்தினரும், அவரது உறவினா்களும் அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா், மாயமான மீனவா்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சாமந்தான்பேட்டை மீனவா்கள், நாகை மீன்வளத் துறை அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்த விபத்தில், காணாமல்போன தங்கள் உறவினா்களின் பெயா், விவரம் மட்டுமே தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், மேலும் பலா் அந்தப் படகில் மீன்பிடிப்புக்குச் சென்று காணாமல்போயிருக்கலாம் எனவும் சாமந்தான்பேட்டை மீனவா்கள் தெரிவித்தனா்.
மாயமான மீனவா்களை கண்டறிந்து மீட்க ஹெலிகாப்டரை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்துத் தகவலறிந்த மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், நாகை அதிமுக நகரச் செயலாளா் தங்க. கதிரவன் ஆகியோா் காணாமல்போன மீனவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், காணாமல்போன மீனவா்களை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...