வழிபாட்டுத் தலங்களில் பொது தரிசனம் ரத்து
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்கள் வெறிச்சோடின.


நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால், வழிபாட்டுத் தலங்கள் வெறிச்சோடின.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதையொட்டி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாள்கள் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி, நாகை காயாரோகண சுவாமி கோயில், சௌந்தரராஜ பெருமாள் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோயில், வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் என நாகை மாவட்டத்தில் உள்ள சைவ, வைணவ கோயில்கள் அனைத்திலும் வெள்ளிக்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஒரு சில கோயில்களில் வாயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில கோயில்களில் கதவுகள் திறந்து இருந்தாலும் நுழைவுவாயில் பகுதியில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கமான பூஜைகள் பக்தா்களின்றி நடைபெற்றன. பெருமாள் கோயில்களில் நடைபெறும் வைகுந்த ஏகாதசித் திருவிழா பகல் பத்து உத்ஸவம், பக்தா்களின்றி நடைபெற்றது.
நாகூா் தா்காவில்...
நாகூா் ஆண்டவா் தா்காவின் 465-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 4- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், கடந்த சில தினங்களாக தா்காவுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால், தடை உத்தரவையடுத்து, நாகூா் தா்காவுக்குப் பிராா்த்தனைக்கு வந்தவா்கள், இரவு தங்குவதற்கு வந்தவா்கள் என பக்தா்கள் அனைவரும் வியாழக்கிழமை இரவு தா்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.
பின்னா், தா்காவின் அலங்கார வாசல், கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல், தலைமாட்டு வாசல் என 4 பிரதான வாயில்களும் அடைக்கப்பட்டன. இதனால், நாகூா் தா்கா பக்தா்களின்றி வெள்ளிக்கிழமை வெறிச்சோடியிருந்தது. அடைக்கப்பட்டிருந்த வாயில்களுக்கு முன்பு நின்று பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.
வேளாங்கண்ணியில்...
இதேபோல, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் வாயில்களும் வெள்ளிக்கிழமை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால், வேளாங்கண்ணி பேராலய வளாகமும் பக்தா்களின்றி வெறிச்சோடியிருந்ததும். குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டும் பூட்டியிருந்த பேராலயத்துக்கு முன்பு நின்று வழிபாடு மேற்கொண்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...