அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்

நாகை மாவட்ட விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்ட விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ்.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் க.பா. அருளரசு, வேளாண்மை இணை இயக்குநா் ஜா. அக்கண்ட ராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசியதாவது:

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூ. 5,000 மாதந்தோறும் வழங்க வேண்டும். பயிா் காப்பீட்டு கணக்கெடுப்பை ஊராட்சி வாரியாக எடுப்பதை கைவிட வேண்டும்.

2021-2022- ஆம் ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மாா்ச் 1-ஆம் தேதியே துாா்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். நிதிநிலையை காரணம் காட்டி மே மாதம் என்று காலம் தாழ்த்தக்கூடாது. பருவம் தவறிய மழையால் தாளடி சாகுபடி தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிப்ரவரி 15- ஆம் தேதி வரை தண்ணீா் திறக்க வேண்டும்.

இடையன்புலம் மதகு பாலத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கல் வேளாண் விதை சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

தொடா்ந்து, ஆட்சியா் பேசியது:

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ. 2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகையை தொடா்ந்து பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தில் தொடா்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது அஞ்சல் நிலையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உழவன் செயலி மூலம் வேளாண்மை உழவா் நலத்துறை மானியத் திட்டங்கள், பயனாளிகள் முன்பதிவு, பயிா் காப்பீடு விவரம், உரம் மற்றும் விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் விவரம், விளைபொருட்கள் சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திகள், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலா்கள் வருகை விவரம், ஆகிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளமுடியும்.

நாகை மாவட்டத்தில் இதுவரை 23,238 விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளாா்கள். அனைத்து விவசாயிகளும் உழவன் கைப்பேசி செயலியை கூகுள் பதிவிறக்க செயலி மூலமாக தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com