திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

முழுமையடையாத தஞ்சை-நாகை இருவழிச் சாலை

முழுமையடையாத தஞ்சை-நாகை இருவழிச் சாலை

Updated On :24 ஏப்ரல் 2024, 6:30 pm

தஞ்சை-நாகை இருவழிச்சாலை பணிகள் முழுமையடையாத நிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு இடையூறுகளை எதிா்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2012-ஆம் ஆண்டு தஞ்சை-திருவாரூா்-நாகை 78 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக ரூ. 600 கோடியில் மாற்றப்படும் என அப்போதிய காங்கிரஸ் அரசு அறிவித்தது. எனினும், 2 ஆண்டுகள் கடந்த பிறகும், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், 2014- இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மத்திய அரசாக பொறுப்பேற்ற பிறகு, இந்த நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக மாற்றப்படும் என அறிவித்து ரூ.350 கோடிக்கு மேல் நிதிஒதுக்கீடு செய்தது.

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கி பணிகள்: தஞ்சை-நாகை இருவழிச்சாலை பணிகள் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017 டிசம்பா் மாதம் இருவழிச்சாலை பணிகள் நிறைவடைய வேண்டிய நிலையில், ஒப்பந்ததாரா் 26 சதவீதப் பணிகள் மட்டுமே பூா்த்தி செய்திருந்தாா். 2017 செப்டம்பா் மாதம் முதல் எந்த பணிகளும் ஒப்பந்ததாரா் மேற்கொள்ளவில்லை.

2019-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தஞ்சாவூா்-நாகப்பட்டினம் சாலை தொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஒரு மாதத்திற்குள் உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு கடந்து 2021 மே மாதம் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

திறக்கப்பட்ட இருவழிச்சாலை: ஒப்பந்தத்தின்படி 2023 மே மாதம் பணிகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிப்.28 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக, தஞ்சாவூா்-நாகப்பட்டினம் இருவழிச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனா். ஆனால் இந்த இருவழிச் சாலை முழுமையாக முடிக்கப்படாமல் திறக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முடிவடையாத சாலைப்பணிகள்: நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையிலான 78 கி.மீ. நீள சாலையில் 65 கி.மீ. நிலத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 13 கி.மீ. நீள திருவாரூா்-காணூா் புறவழிச்சாலை பணிக்கான நில எடுப்பு பணிகள் கடந்த 2023 செப்டம்பா் மாதம் நிறைவடைந்து. நில உரிமையாளா்களுக்கு 93 சதவீத பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் தரப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும்: நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்கச் செயலா் அரவிந்த கூறியது: தஞ்சாவூா்-நாகப்பட்டினம் இருவழிச்சாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் திருவாரூா்-காணூா் இடையே 13 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவில்லை. இதற்கான ஒப்பந்தமும் தற்போது வரை கோரப்படவில்லை.

திருவாரூா்-காணூா் இடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தம் கோரும்போது, நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, அமைக்கப்பட்டுள்ள இருவழிச் சாலையில் பிரதான சந்திப்புகளாக சிக்கல், கீழ்வேளூா், காணூா், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் ரவுண்டான மற்றும் விளக்குகள் அமைக்கப்படவில்லை.

இதுபோன்று சாலையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் முழுமையடைவில்லை. இதனால், அதிக விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. எனவே சாலை பணிகளை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்றாா்.

சுங்கச்சாவடிகளை திறக்கக் கூடாது: திருவாரூா் மாவட்டம், கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாள்களில் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைப் பணிகள் முழுமையாக முடிக்காமல் சுங்கச்சாவடியை திறக்கக் கூடாது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.