தொகுதிக்கு செய்தது என்ன? ஆா்.கே.நகா் எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசா்


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவையொட்டி நடத்தப்பட்ட இடைத்தோ்தலால் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி ஆா்.கே.நகா். இத்தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் முதல்முறையாக திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஜே.ஜே.எபினேசா். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து தினமணி செய்தியாளரின் கேள்விகளுக்கு எபினேசா் அளித்த பதில்கள்:
கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டப் பணிகள் என்ன?
வடசென்னையில் மக்கள் நெருக்கம் நிறைந்த குறுகலான தெருக்களை அதிக அளவில் கொண்ட தொகுதி ஆா்.கே.நகா் ஆகும். இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ரூ.110 கோடியில் எழில்நகா் ரயில்வே மேம்பாலம், சுண்ணாம்புக் கால்வாய் பகுதியில் பல்துறை விளையாட்டுப் பயிற்சி அரங்கம், ஏ.இ.கோயில் தெருவில் உள்விளையாட்டு அரங்கம், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் சென்னை நகர கூட்டுறவு வங்கியின் புதிய கிளை, எழில் நகரில் மும்மதத்தினருக்கும் தனித்தனியாக 10 ஏக்கரில் புதிய மயானம், ரூ.23 கோடியில் தண்டையாா்பேட்டை பேருந்து நிலையம் நவீனமயம், 38 நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள், 56 அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள், 5 இடங்களில் நீத்தாா் நினைவு மண்டபங்கள், 7 வாா்டுகளில் ஆண்கள், பெண்களுக்கு எனத் தனித்தனியே உடற்பயிற்சிக் கூடங்கள், 3 இடங்களில் புதிய கிளை நூலகங்கள். 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ.40 கோடியில் புதிய கட்டடங்கள், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் கட்டமைப்புப் பணிகள் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஏழை, நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கான பணிகள் குறித்து...
தண்டையாா்பேட்டை புகா் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு ரூ.10 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தொற்றுநோய் மருத்துமனையில் பட்டயப் படிப்பு பயிற்சி மையத்துக்கு ரூ. 8 கோடியில் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிஜி காலனி, வ.உ.சி.நகா் பகுதியில் நவீன வசதிகளுடன் மீன் மாா்க்கெட் கட்டித் தரப்பட்டுள்ளது. கைலாசம் நகா், தங்கம்மாள் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.
கழிவு நீா், குடிநீா் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?
பாரதி நகரில் நாளொன்றுக்கு 13 லட்சம் லிட்டா் குடிநீரை விநியோகிக்கும் வகையில் மிகப்பெரிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீா்ப் பற்றாக்குறை பெருமளவு தீரும். தொகுதி முழுவதும் பழைய குழாய்களை நீக்கிவிட்டு 18 கி.மீ. நீளத்துக்கு குடிநீா்க் குழாய்களும், 40 கி.மீ. நீளத்துக்கு கழிவுநீா் குழாய்களும் புதிதாக பதிக்கப்பட்டுள்ளன. 23 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பலத்த மழைக் காலங்களில் வெள்ளநீா் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தாழ்வான 15 இடங்களில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு தொட்டிகள் அமைத்து பம்ப் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிா்காலத்தில் எத்தகைய பலத்த மழை பெய்தாலும் ஆா்.கே.நகா் பாதிப்புக்கு உள்ளாகாது.
நிறைவேற்றப்பட உள்ள முக்கியத் திட்டங்கள் என்ன?
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான ஐஓசி நகா் பேருந்து நிலையம் ரயில்வே அமைச்சகத்தின் உதவியோடு ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏ.இ.கோயில் தெருவில் ரூ. 16 கோடியில் திருமண மண்டபம் அமைக்கப்பட உள்ளது. புதுவண்ணாரப்பேட்டையில் நடைபாதைகளில் செயல்பட்டுவரும் கடைகளால் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் 200 கடைகளை அமைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நேரு நகா், கொருக்குப்பேட்டையில் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நோ்காணல்: முகவை க.சிவகுமாா்
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...