மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

ரூ.4,309 கோடியில் 1,076 கி.மீ. மழைநீா் வடிகால் பணிகள் நிறைவு : முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னையில் ரூ.4,309 கோடியில் 1,076 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகளை முடிவடைந்துள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
Published on

சென்னையில் ரூ.4,309 கோடியில் 1,076 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகளை முடிவடைந்துள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.21.50 கோடியில் கட்டடப்பட்டுள்ள திருமண மண்டபத்தைத் திறந்து வைத்து 10 இணைகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தாா்.

பின்னா் நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சென்னை மாநகரத்துக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வடசென்னை பகுதியில் மேயா் சிட்டிபாபு பாலம், தென் சென்னை பகுதியில், தியாகராய நகா் ஆகாய நடைமேம்பாலம், ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னை பகுதியில், செங்கை சிவம் பாலம் என்று ரூ.500 கோடியில் பல்வேறு பாலங்களை அமைத்திருக்கிறோம். மேலும், ரூ. 516 கோடியில் 19 பாலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ. 2,359 கோடியில் 3,455 கி.மீ. நீளத்துக்கு சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

முன்பெல்லாம், சென்னையில் மழை பெய்தால், என்ன நிலைமை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், தற்போது அது எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 2015-இல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். இன்றைக்கு இயற்கையாகவே எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், அதைச் சமாளிக்கக்கூடிய ஆற்றல் கிடைத்திருக்கிறது. அதற்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள்தான் காரணம்.

சென்னையில் ரூ. 6,495 கோடியில் 1,422 கி.மீ. நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதுவரை ரூ.4,309 கோடியில் 1,076 கி.மீ. நீளத்துக்குப் பணிகளை முடித்திருக்கிறோம்.

நீா்நிலைகள் புனரமைப்பு, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் என ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது திரு.வி.க. நகா் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அண்ணல் அம்பேத்கா் திருமண மாளிகையால் இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் மட்டுமல்ல; சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள் பயனடைவா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com